இரண்டு பிரதமர்களைக்கொண்ட முதலாவது நாடு இலங்கை!

Print tamilkin.com in இலங்கை

முதல் பெண் பிரதாமரைக் கொண்ட நாடு இலங்கை என்ற பெருமையைப்போல், தற்போது இரண்டு பிரதமர்களைக் கொண்ட முதலாவது நாடு இலங்கை என்றும் குறிப்பிடலாம்.

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2014 நொவம்பர் மாதம், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முதல் நாள் இரவு, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் காலையில் மைத்திரிபால சிறிசேன எப்படி எதிரணிக்கு ஓடிச் சென்றாரோ, அதேபோன்றதொரு பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்திருப்பதாக கடிதம் அனுப்பி, இவை இரண்டையும், வர்த்தமானி மூலம் அறிவித்த போதும், ரணில் விக்கிரம சிங்க அரசியல் அமைப்பின்படி தானே பிரதமர் என்று கூறுகிறார்.

மேலும், பாராளுமன்றைக் கூட்டினால் தான் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளதனால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கூட்டி அங்குள்ள ஆதரவை நிரூபிக்கும் வரை நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவரும் நிலையில், ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

மொத்தத்தில் கடந்த ஒரு வாரமாக ( தற்போதுவரை ) இந்த நாட்டில் இரு பிரதமர்கள் என்ற நிலையே காணப்படுகிறது .