அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை: சரத் பொன்சேகா!

Print tamilkin.com in இலங்கை

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தன.

பல்வேறு திட்டங்களில் கூட்டு அரசாங்கம் சீனாவுடன் இணைந்து பணியாற்றியது. சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டது.

எனினும், சில அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் சிலருடன் தனிப்பட்ட உறவுகளை வைத்திருக்கக் கூடும்.

விஜேதாச ராஜபக்ச தொடர்பாக, நான் முன்னர் கூறியது, இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

அவர், அவன்ட் கார்ட் வழக்கை இல்லாமல் செய்வதற்கு இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளார் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினேன்.

மகரகமவில் அதனைக் கூறி, மக்களிடமும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம், அவரது இதயம் மகிந்தவிடம் இருக்கிறது என்று கூறினேன்.

அப்போது நான் சொன்னது இப்போது உண்மை என்றாகி விட்டது.

வடக்கு- கிழக்கை இணைக்க விடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். அதற்கான எந்த நகர்வும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபற்றி யாரும் பேசவும் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.