சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி சந்தேகம்

Print tamilkin.com in இலங்கை

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது.
இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்பு செய்வும் முடிவு செய்யப்பட்டது.

நீண்ட பேச்சுக்கள் மற்றும் இணக்கப்பாடுகளை அடுத்து, இந்த உதவித் திட்டம் குறித்த உடன்பாடு வரும் டிசெம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது,

அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம், ஜனநாயகம், ஊழலைக் கட்டுப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி, தகவல் சுதந்திரம் உள்ளிட்ட பல நிபந்தனைகளுக்கு அமையவே மிலேனியம் சவால் நிதி உதவி வழங்கப்படுகிறது.

எனினும், தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களினால், சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம், சுதந்திரம், அரசியல் உரிமைகள் உள்ளிட்ட மேற்படி நிபந்தனைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

இதனால், அமெரிக்காவின் நிதியுதவி வழங்கும் உடன்பாடு அடுத்தமாதம் கையெழுத்திடப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.