சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி பறிபோகும் நிலைமை!

Print tamilkin.com in இலங்கை

முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் என்ற பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் காணப்படும் சட்ட நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை பறிக்க முடியுமா என்று விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வாவுடன் சரத் பொன்சேகாவும் இணைந்து செயற்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையின் பணிப்பாளர் நாமல் குமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கூறியிருந்தார்.

இதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மீதான இந்த குற்றச்சாட்டு அரச விரோத சதித்திட்டம் என ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்களும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் என்ற பதவி என்பது இராணுவத்தின் செயற்பாட்டு ரீதியான பதவி என்பதால், சரத் பொன்சேகாவுக்கு முழுமையான இராணுவ பாதுகாப்பும் அலுவலகமும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவி வகிக்கும் ஒருவர் அரசியலில் ஈடுபட முடியாது எனவும் அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் அந்த பதவியில் இருந்து விலகி விட்டு, அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது சட்டமாகும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அரச தலைவர்களுடனான சந்திப்பு, வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் சுதந்திர தினம் போன்ற நிகழ்வுகளின் போது பீல்ட் மார்ஷல் பதவிக்குரிய சீருடை அணிவதால், அந்த பதவி செயற்பாட்டு ரீதியான இராணுவப் பதவி எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதவியை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால், அந்த பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமும் முப்படை தளபதியான ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.