வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு: கிழக்கு பல்கலை மாணவர்களின் விசேட அழைப்பு!

Print tamilkin.com in இலங்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு பணியில் ஒன்றிணையுமாறு மக்கள் நலன் காப்பகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த அடைமழையின் காரணத்தினால் வாகரை மற்றும் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் காரணத்தினால் பல பொதுமக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி உள்ளனர்.

இவர்களுக்கான உணவு வசதிகளை ஏற்படுத்தும் முகமாக வெள்ள நிவாரண சேகரிப்பு பணி ஆரம்பித்தல் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

குறித்த செய்தியாளர் சந்திப்பின் போதே பல்கலைகழக மாணவர்கள் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பெரும் பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியிருக்கும் நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள், மருந்துவகைகள்,

சிறுவர்களுக்கான பால்மா வகைகள், மற்றும் பெண்களுக்கு தேவையான பொருட்கள் என அனைத்து விடயங்களிலும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையினால் இவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.