மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 280ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு!

Print tamilkin.com in இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக 280ற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதி கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட தாழ்வான பகுதிகளிலுள்ள முனைத்தீவு, பட்டாபுரம், பழுகாமமம் கோவில் போரதீவு, பெரியபோரதீவு போன்ற பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

வீடுகளில் நீர் தேங்கியுள்ளதன் காரணமாக சுமார் 280க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவற்றில் 230 குடும்பங்கள் பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய அன்னதானமடத்திலும் ஏனைய குடும்பங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் படிப்படியாக குறைந்துவரும் நிலையிலும் மக்களின் இருப்பிடங்களில் உள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்துவதில் பிரதேசசபை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பட்டிருப்பு – பெரியபோரதீவு பிரதான வீதி, பெரியபோரதீவு- பழுகாமம் பிரதான வீதி, வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்முனை –கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, மாவடிமுன்மாரி – தாந்தாமலை பிரதான வீதி, வலையிறவு - வவுணதீவு பிரதான வீதி, என்பவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால், குறித்த வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு வாவியில் நீரோட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக படுவான்கரைக்கான இயந்திர படகு சேவைகளும் இடம்பெறாத நிலையில் மக்கள் பெரும் போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.