நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மக்கள் விரும்பும் வகையில் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ..!

Print tamilkin.com in இலங்கை

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மக்கள் விரும்பும் வகையில் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களுடனான பொதுச்பைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையிவல் –

தற்போது நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றத்தால் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இது எம்மைப் பொறுத்தளவில் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாட்டில் நல்லாட்சி என்று கூறி ஆட்சி செய்தவர்கள் மக்களையும் நாட்டின் அபிவிருத்தியையும் முன்னேறவிடாது தடுத்துவந்தார்கள். இதற்கு முண்டு கொடுத்த தமிழ் தரப்பினர் தமது தனிப்பட்ட சுகபோகங்களை மட்டும் பெற்று தமிழ் மக்களை வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருந்தார்கள்.

இதனால் ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை உருவாகியிருந்தது. அதன் விழைவாக புதிய அரசு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் எமக்கு பொறுப்பு மிக்க அமைச்சு பொறுப்பொன்று வழங்கப்பட்டது.

ஆனாலும் அரசியல் குழப்பங்களால் ஜனாதிபதியின் அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் எமது அமைச்சின் அதிகாரம் தொடர்ந்தும் இருக்கும்.

அமைச்சினூடாக புதிய செயற்றிட்டங்களை உருவாக்க முடியாது ஆனாலும் கடந்தகாலங்களில் முன்மொழியப்பட்ட திட்டடங்களை மக்கள் நலன்சார்ந்து மக்களது நலனுக்காக பயன்படுத்த முடியும்.

அந்தவகையில் தமது எதிர்கால நலன்கருதியதாக எதிர்கொள்வார்கள் என்று நம்பிக்கை எம்மிடம் உள்ளது. எனவே வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை மக்களின் விருப்புக்கேற்ப அவர்களது நலன்களில் இருந்து எதிர்கொள்ள நாம் தாயாராவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.