இலங்கையை நோக்கி வருகிறது காஜா சூறாவளி!

Print tamilkin.com in இலங்கை

மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது.

காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் இலங்கையின் வடக்கு, கிழக்கு திசையில் இது நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் மேற்குத் திசை நோக்கி நகரக்கூடும்.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பொத்துவிலில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்குப் அப்பாலான கடல் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

நாட்டின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேச கடல் பகுதியில் காற்றின் வேகம் அடிக்கடி 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறான வேளையில் கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது காற்றின் வேகம் உடனடியாக 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த கடல் பிரதேசத்தில் கடல் உடனடியாக கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.