ஜனாதிபதியை சந்திக்க மாட்டோம்! - மனோ கூறுகிறார்

Print tamilkin.com in இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை சிறுபான்மை கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்றத்தில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கை இல்லா பிரேரணையை, மகிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் எனவும், ஆகவே இன்று நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ கிடையாது.

இந்நிலையில் ஜனாதிபதி சிறிசேன உடனடியாக புதிய பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி, இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இனி நடத்தப்படாது எனவும் நாம் ஜனாதிபதிக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், சபாநாயகர், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட ஒரு கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்ததுடன், இதற்கான அழைப்பு தமக்கு கிடைத்ததாகவும் மனோகணேசன் கூறியுள்ளார்.

எனினும் நேற்றிரவு, ஜனாதிபதி, நம்பிக்கை இல்லா பிரேரணையை நிராகரித்து, ஒரு கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் நாம் பாராளுமன்றம் செல்வோம்.

இன்று பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும், “பாராளுமன்ற உறுப்பினர்” களாக மட்டுமே பங்குபற்றுவார்கள். இன்று எவரும் அங்கே “பிரதமர்” அல்லது “அமைச்சர்” என்ற அடிப்படைகளில் உரையாற்ற முடியாது. அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் அவர் அந்த முகநூல் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.