சட்டவிரோத அரசாங்கத்தை நீக்கியாபின் ஐ.தே.க. பிரதமர் தொடர்பாக தீர்மானிக்கும்! - சஜித் பிரேமதாச தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

சட்டவிரோதமான அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கும் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளின் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு -

ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கே ஐக்கிய தேசிய முன்னணி தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை ஸ்தாபித்து, சட்டவிரோதமான இந்த அரசாங்கத்தை நீக்கி விட்டு, சட்டரீதியான அரசாங்கத்தை அமைப்பதே எமது தேவை.

சபாநாயகர் சட்டவிரோதமாக செயற்படுவதாக கூறும் தினேஷ் குணவர்தன அமைச்சரா, இல்லையா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்தன உட்பட அந்த அணியினருக்கு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்றால், இன்று மாலை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் கொண்டு வர முடியும். நிலையியல் கட்டளை சட்டங்களை நிறுத்தி அதனை செய்ய முடியும் எனவும் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.