யாழ்ப்பாணத்தில் உந்துருளி படையினரின் பிரவேசம்:பதற்றத்தில் மக்கள்

Print tamilkin.com in இலங்கை

இராணுவத்தினரின் உந்துருளிப் படையணியினர் நேற்று முதல் குடாநாட்டின் நகரப் பகுதி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் பதற்றம் நிலவியது.

இன்று காலையும் வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்துள்ள பகுதி மற்றும் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லப்பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு இளைஞர்களிடம் அடையாள அட்டைப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய உந்துருளிப் படையணியினர் மாலையில் யாழ் நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவினர்.
இவ்வாறு உந்துருளியில் பயணித்த படையினர் பயணித்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதிலும் மிகவும் வேகமாக அச்சுறுத்தலான வகையிலேயே பயணித்தமையினை கண்ட மக்கள் பதற்றமடைந்த நிலையில் ஒதுங்கி நின்றனர்.

இருப்பினும் இன்று தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமும் நாளை மாவீரர் நாளும் என்பதனாலேயே மேற்படி படையினர் நீண்ட காலத்தின் பின்னர் வெளியில் வந்திருக்ககூடும் என்பதனை ஊகிந்த மக்கள் மௌனமாக கலைந்து சென்றனர்.