களமிறங்கிறார் சந்திரிக்கா!

Print tamilkin.com in இலங்கை

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மாற்று வழி ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கி, பொதுத் தேர்தலை சந்திக்க சந்திரிக்கா திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு புதிய அரசியல் முன்னணி ஒன்றை கட்டியெழுப்பும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொதுஜன முன்னணியுடன் இணைவதற்கு விரும்பும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை தவிர, ஏனையவர்களை இணைத்து கொண்டு புதிய முன்னணி ஒன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கையினை சந்திரிக்கா முன்னெடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட கடும் எதிர்ப்பு வெளியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் 50 பேர் மற்றும் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த புதிய முன்னணியுடன் இணையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்கீழ் புதிய சிறிய கட்சியை இணைத்து கொள்வதற்கும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுநத்திர கட்சியின் பிரபலம் மற்றும் சில தலைமை பதவிகளில் உள்ளவர்கள் உட்பட இந்த தீர்மானமிக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பொதுஜன முன்னணி என்ற மாற்று கட்சியை ஆரம்பித்துள்ளனர். இந்தக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முற்றாக பிளவடைய செய்து முழு உறுப்பினர்களையும் தமது கட்சியில் இணைக்கும் செயற்பாட்டினை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னெடுத்து வருகிறார்.

சந்திரிக்காவின் தந்தையான பண்டாரநாயக்கவினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உருவாக்கப்பட்டது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக, சுதந்திர கட்சி இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சியையும் நாட்டையும் காப்பாற்றும் தீவிர முயற்சியில் சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டுள்ளார்.

அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகிய சந்திரிக்கா நேரடியாக மீண்டும் களமிறங்கியுள்ளதால், ராஜபக்ஷ தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.